சமதர்ம இல்லம்

சமதர்ம இல்லம் - பெயர் காரணம்

 

தலைவர்கள் இயக்கத்தினை வழிநடத்துவார்கள்.பொறுப்பாளர்கள் தலைவர் வழியைப் பின்பற்றி இயக்கம் செம்மையுற உழைப்பார்கள். பேச்சாளர்கள் கொள்கையையும் தலைவரின் ஆளுமைத் திறனையும் தங்களுக்கே உரிய பாணியில் பரப்புவார்கள். திடீர் பேச்சாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் எனப் பேச்சாளர்களில் எத்தனையோ ரகம். தலைவர்கள் , பொறுப்பாளர்கள், பேச்சாளர்கள் என யாவரையும் தாங்கிப் பிடித்து கொள்கைகளைப் பரப்பும் தொண்டன் எந்த ஒரு இயக்கத்திற்கும் அச்சாணி.

தொண்டர் தம் பெருமையை சொல்லவும் அரிது என்பது உண்மையான உண்மை. சுயமரியாதை இயக்க ஆரம்ப நிலையில் இயக்கம் வளர்க்கப் பாடுபட்ட தூய உண்மைத் தொண்டர்கள் வரிசையில் முக்கிய இடத்தைப் பெற்றவர் மறைந்த பெரியவர் அய்யா காரைக்குடி இராம.சுப்பையா அவர்கள்.

1908ல் புதுக்கோட்டை அருகே உள்ள அரிமளம் என்ற ஊரில் பிறந்தார். பார்ப்பனர்களை விட அதிகமாக சடங்காச்சாரங்களில் ஊறித் திளைத்த நகரத்தார் சமூகத்தில் காரைக்குடி சொ.முருகப்பா சுயமரியாதை இயக்கத்தைக் கட்டமைத்தார். அவரின் மைத்துனர் தான் இராம.சுப்பையா. இளம் வயதிலேயே பெரியாரின் குடியரசு மூலம் கவரப்பட்ட அவர் ஓய்வில்லாத ஒரு தொண்டர் மட்டுமல்ல, சிறந்த பிரச்சாகரரும் கூட. பிரிக்கப்படாத முகவை மாவட்டத்தில் தந்தை பெரியாரை அழைத்து சுயமரியாதை மாநாடு நடத்தினார். 1932ல் ஆதிதிராவிடர் மாநாடு நடத்த முற்பட்ட போது கடும் எதிர்ப்பு. உள்ளூர் வைதீகர்கள் மாநாடு நடத்த R.D.0விடம் தடை வாங்கிவிட WPA.சவுந்திரபாண்டியன் மூலம் அந்தத் தடையை மதுரை கலெக்டரிடம் அப்பீல் செய்து ரத்து செய்ய வைத்து மாநாட்டினை நடத்திக் காட்டினார். பெரியார், அழகிரி, சிங்காரவேலர் போன்ற தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டின் வெற்றியைப் பார்த்து எதிர்ப்பு தெரிவித்தவர்கள் ஆதிதிராவிடர் மாநாடுசிறப்பாக நடந்து விட்டது என்று பாராட்டினார்களாம். இவர்கள் தான் முதலில் பள்ளு ,பறைகள் மாநாடு நடத்துகிறார்களாம் என்று கேலி செய்தவர்கள். செட்டிநாட்டுப் பகுதியில் பகுத்தறிவுப் பிரச்சாரம் பரவுவதைக் கண்ட நகரத்தார் சமூக பிற்போக்காளர்கள் இவரையும், இவர் தம் துணைவியார் விசாலாட்சி அம்மையாரையும் விஷம் வைத்துக் கொல்ல முயன்று தோல்வியடைந்தார்கள்.

தமிழ்நாட்டின் முதல் கம்யூனிஸ்ட்டான தோழர் ம.வெ.சிங்காரவேலர் தான் இவர் கட்டிய வீட்டிற்கு "சமதர்ம விலாஸ்" என்று பெயர் சூட்டி பெயர்ப் பலகையையும் தன் செலவில் கொடுத்தார். 1952ல் நடந்த கல்லக்குடி போராட்டத்தில் கலைஞருடன் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். பெரியார், அழகிரி, அண்ணா, பாரதிதாசன்,சிங்காரவேலர் போன்ற தலைவர்களுடன் பழகி அவர்களின் அணுக்கத் தொண்டராய் விளங்கினார். "ஓர் இரவு " திரைப்படமாக அண்ணாவிடம் தூது சென்று AVM திரைப்படம் எடுக்க உதவினார். உழைப்பு ஓர் உருவம் பெற்று ஓடியாடி வேலை செய்யும் அதிசயம் இராம.சுப்பையா என்று கலைஞர் பாராட்டியதோடு 1972ம் ஆண்டு MLC யாக நியமனம் செய்து அவர் உழைப்பிற்கு அங்கீகாரம் அளித்தார்.

திராவிட இயக்கத்தில் தான் எப்படி ஈர்க்கப்பட்டு பணி புரிந்தேன் என்பதை ஒரு சிறிய நூலாக " நானும் எனது திராவிட இயக்க நினைவுகளும் " என்ற தலைப்பில் வெளியிட்டார். நான் சாகும் போது கலைஞர் முதல்வராக இருப்பார்.,அவர்தான் என் உடலுக்கு முதல் மாலை போடுவார் என்று எல்லாத் தொண்டர்களுக்கும் இருக்கும் ஆசைப்படியே 21-05-1997ம் ஆண்டு மறைந்த போது கலைஞர் ஓடோடி வந்து முதல் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.